Sunday, January 15, 2012

அனார் கவிதை - ரோகிணி மணி


அனார் கவிதை
ஓவியங்கள்: ரோஹிணி மணி
முதல் சுவை
சாத்தானின் வற்புறுத்தலினால்
நீ தவமிருந்து காத்த
செந்நிறக் கிண்ணத்தில் தருகிறாய் நெருப்பை
நெருப்பின் சுவை
ஒரு பாவத்தைப் போன்று ருசிக்கின்றது
மாயலோகத்தின் வெள்ளிமலை
உச்சிகளைக் காண்பித்தாய்
என் வரிக்குதிரைகள்
அங்குதான் இளைப்பாறுகின்றன
மலை உச்சிகளுக்கப்பால்
அவதாரில்பறந்த ராட்சத ராஜாளிகள். . .
நானும். . . நீயும். . .
உரம் பாய்ந்த மூங்கில்கள் உரசி
நெருப்புப் பொறிகள் காற்றில் தெறிக்கின்றன
உண்டு திளைத்த கனியின் மீதங்கள்
சுடரெறியும் விண்ணுலகம்
நெருப்புக் கனிகள் காய்த்துள்ள
மரத்தின் மேலே
பிரகாசமான நீரோடை
கண்ணாடி நீரில் ஆதாம் ஏவாளின் உடல்கள்
முதல் சுவையுடன்
முதல் மொழியுடன் அமிழ்கின்றன
உனது நாக்கு
தீச்சுவாலையாகப் பற்றியெரிகின்றது
எல்லாமும் எரிந்தடங்குகின்றன
சாத்தானின் கோட்டைச் சுவரில்
நெருப்பின் வெப்பம்
கனியின் வாசனை
மீண்டும். . .

நன்றி: காலச்சுவடு

No comments:

Post a Comment