மலைகள் நடுநடுங்கும் கானல். தோட்டத்தில் வாழையும் கத்தாழையும் உச்சி வெயிலில் தனிப் பச்சை விட்டன.
வடக்கே பார்த்த வாசல். வீடு, ரொட்டி அடுப்பாய் வெந்தது. ஆனால், கொல்லை ரேழி மட்டும் ஊட்டியோடு உறவாடிற்று. கொல்லை ரேழி மாமியாருக்கு மானியம். மதியம் அங்கு கட்டையை நீட்டிவிடுவார். நீட்டியாச்சு!
தூளிக் கயிற்றை பங்கா மாதிரி இழுத்துக்கொண்டு சிவாமி கூடத்தில் புழுங்கினாள். மின்விசிறி கூடத்தில் அனலைக் கடைந்தது.
அறையில் அனந்து, அண்டை வீட்டு, பின் வீட்டுக் குட்டிகள் தூங்கவொட்டாமல் ஏதோ கொட்டமடித்துக்கொண்டு இருந் தன. அதுகளுக்கு வேளை கிடையாது, போது கிடையாது; எப்ப வும் இங்கேதான் குடி! இவன் அங்கே தொலையட்டுமே! மாட்டான். அத்தோடு அனந்து ஒரு ‘ராஸக்ரீடை’ மன்னன். எப்பவும் பொட்டைக் குட்டிகள்தான் அவனைச் சுற்றி!
அனந்து பொண்ணாய்ப் பிறந்திருந்தால் ஒரு எச்சிலாவது இடும். கன்னிப்பொண்ணுக்குத் தோஷமில்லேனு உலை நீருக்கு அடுப்பில் மடி ஜலம் ஏற்றச் சொல்லலாம். பொண்ணாப் பிறந் துடுத்துன்னு தனிக்கவலை படற நாள்தான் போயிடுத்தே! அது களும் படிக்கிறதுகள்; உத்யோகம் பண்றதுகள்; கல்யாணத்துக்குச் சேர்த்து வெச்சுக்கறதுகள்! உத்யோகத்தோடே புக்ககத்துக்குப் போய்ச் சேர்ந்துடறதுகள்!
அனந்துக்கு எட்டு வருஷத்துக்குப் பின் தூளியில் தூக்கணாங்குருவி – தூங்காத
குருவிதான் – அதுவும் குஞ்சு மிளகாய்தான். வயத்தில் ஒண்ணு புரள்றது. ஈசுவர சித்தம் எப்படியோ? எப்படாப்பா கயளப் போறதுன்னு இருக்கு. ஆனிக்கு மாசம். அப்பவும் அயட்டல்தான். சிவாமி முனகினாள். பல வேதனை.
ரேழியில் உண்ட மயக்கத்தில், பளி உடம்பின் அசதியில், பாட்டிக்குக் கண் செருகிற்று.
இன்னிக்கு காங்கை கூடத்தான். ஒப்புக்கறேன். நிறை கர்ப்பிணிதான். ஒப்புக்கறேன். அதுக்காக இப்படி ஒரு முக்கலா? முக்கவே தனியா ஆள் போடலாம் போல இருக்கே! நாங்கள் எல்லாம் சுமந்ததில்லையா? இந்த வெயிலுக்கே இப்படி விண்டு போறாளே! ஒரு டில்லி, ஒரு இந்தூர், ஒரு ஜபல்பூருக்கு இவள் என்ன ஜவாப் சொல்லுவாள்? எல்லாம் தஹிக்கிற வெயில்தான்; ஸகிக்காத குளிர்தான்! ஒரே அநாசாரம், அசுத்தம்தான். எல்லாரும் எல்லாத்தையும் எச்சில் பண்ணிக் குடிக்கிற இடம்தான். இது நடுவுலே வளைய வரணும். வளைய வந்தாச்சு!
‘தொப்’பென்று தொப்பை மேல் யாரோ விழுந்ததும், வெடுக் கென விழித்துக் கொண்ட அந்த அதிர்ச் சியில், நினைவுகள் கொண்டு போய்விட்ட அரை மயக்கத்தில், திடீரெனத் தன்னைச் சூழ்ந்துகொண்ட சிரிப்பின் கொந்தளிப்பு ஆரவாரத்தில், யாரிலிருந்து யார் என்று பிரிக்கமுடிய வில்லை. கண் சதை வளர்ந்ததால் கண் மங்கலில், கானல் வெயிலில் ரேழியின் குளுமையான இருட்டில் தளர வாரிய வங் கிக் கூந்தல் நடு வகிட் டின் கீழ் ஸ்படிகம் போன்ற நெற்றி மத்தியில் பச்சை ஜிகினாப் பொட்டு, பச்சைப் பட்டுத் தாவணி, பச்சை ரவிக்கை, பச்சைப் பட்டுப் பாவாடை…
அவளின்று வெளிப்பட்ட வீறலில், குழந்தைகள் அரண்டு விட்டன. விஷயம் புரியாமல் எதிர் அலறல் கொடுத்துக் கொண்டே சிவாமி உடல் குலுங்க ஓடி வந்தாள். எல்லோரும் பாட்டியைச் சூழ்ந்து கொண்டனர்.
”என்னம்மா? என்னம்மா??”
”கமலீ! கமலீ!!” – பாட்டி அலறினாள்.
”கமலியா?”
திகைத்துப் போய், சிவாமி திரும்பிப் பார்த்தாள். அனந்துக்குப் பெண் வேஷம் போட்டிருந்தது. அவளுடைய சவுரி பாழ். ஆனால், பயல் பெண்ணாகவே மாறி விட்டான். பெண் இவ்வளவு அழகாயிருப் பாளோ, சந்தேகம்தான்! பக்கத்தாத்து பாரதி, பின்னாத்து சித்ரா, எதிர்வீட்டு ஜாய்ஸ் எல்லாரும் சேர்ந்து பண்ணியிருக்கும் அலங்காரம். சின்னதா ஒரே சைஸா மொட்டு மாதிரி இரண்டு கொட்டாங் கச்சிகூட இதுகளுக்கு எங்கே கிடைச்சுதோ? துஷ்டைகள்!
விசுவரூபமெடுத்தாற்போல், பாட்டிக்கு உருவமே பெரிதாகிவிட்டாற் போல் ஒரு ப்ரமை தட்டிற்று. பயமாய் இருந்தது. முகத்தில் குங்குமம் கொதித்தது. கன்னங்கள் வெடித்து விடும்போல் புடைத்துவிட்டன. விழிகள் ஏற்கெ னவே பெரிசு! சற்று புலிக்கண். இப்போ மேடிட்டு, திரிகளை ஏற்றினாற் போல் எரிந்தன. அந்த வெறித் தோற்றத் தில் முகத்தில் ஓர் அற்புதமான அழகு – அதற்குச் சொந்தமில்லாதது – குங்கிலி யம் போல் குபீரிட்டது பயமாய் இருந்தது. பேர் ஏன் கறிவேப்பிலை? தாழம்பூப் பாட்டி என்றால், முற்றிலும் தகும். இந்த வயசுக்கே இந்த மேனி யானால் என் வயசுக்கு எப்படி இருந்திருப்பார்? சிவாமிக்கு அசூயை தட்டிற்று.
”அம்மா… கொஞ்சம் தீர்த்தம் குடிக்க றேளா? உடம்பு சரியாயிருக்கேளா?”
வாயோரம் வழிந்த எச்சிலை பாட்டி, முன்றானையால் இழுத்துத் துடைத்துக் கொண்டாள்.
”அம்மா, இந்தக் குட்டிகள் அனந்துவை என்னவோ கோலம் பண்ணி, விளையாட்டுக்கு உங்கள் மேல் தள்ளி விட்டிருக்குகள்…”
பாட்டி புரிந்துகொண்ட முறையில் தலையை ஆட்டினார். சிங்கம்.
”ஆனால், நீங்கள் கமலின்னு வேறே ஏதோ பேர் சொன்னேள்..!”
”என் பெண்.”
”ஓ! எனக்கு இதுவரை தெரியாதே!”
”உன் ஆம்படையானுக்கு மூத்தவள்.”
”அப்படியா? என்ன ஆச்சு?”
”என்ன ஆகும்? செத்துப் போயிட்டா. இதென்ன கேள்வி?”
”அதுக்கில்லேம்மா… இந்தாத்துக்கு வந்து இதோ நான் மூணாவது பெக்கப் போறேன். இதுவரை அந்தப் பேர், வெறும் பேச்சுவாக்கில்கூட அடிபட்ட தில்லே. அவரும் சொன்ன தில்லே…”
”இதென்ன க்ராஸ் – வக்கீல் மாதிரி? எல்லாத்துக் கும் உனக்குக் கணக்கு ஒப்பிச்சாகணுமோ?”
சரி, பாட்டிக்கு உடல் தன் நிலை திரும்பியாச்சுக்கு வேறு ருசு வேண்டாம். கூஜாவில் தீர்த்தம் தலைமாட்டில் வைத்து விட்டு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு சிவாமி கூடத்துக்குப் போய்விட்டாள்.
எங்கோ ஒரு நாயின் குரைப்பு!
இந்த வேளைக்குத் தூக்கம் ஒரு சொர்க்கம். ஆனால், பாட்டிக் குத் தூக்கம் கலைந்துவிட்டது. முனகி முனகிப் புரண்டாள்.
”நீங்கள் கடவுளைக் கண்டிருக் கிறீர்களா?”
”நிச்சயமாக!”
”எனக்குக் காட்டுவீர்களா?”
”கண்டிப்பாய்க் காண்பிக்கிறேன்!”
(ஏதோ, போற வழிக்குப் புண் ணியம் தேட, நானும் ஒண்ணு ரெண்டு ஏதேனும் படிக்கறேன்!)
மஹான்கள் வழிக்கு நாம் போக வேண்டாம். நம் சந்தேகங் கள், கசடுகள் நம்மோடேயே இருக்கட்டும். இருந்தாலும்…
ஒரு வானத்தின் நீலத்தில் அவள் நிறம்.
வாழையிலையின் பச்சையில், காற்றின் இலைப்பாளத்தின் அசைவில் அவள் பாவாடைக் கொசுவம், பஞ்சவர்ணக்கிளியின் சிறகில் அவள் ரவிக்கையின் கலர், மழையிருட்டில் அவள் கூந் தலின் கருமை, மேகத்தின் கணத் தில் அவள் கூந்தலின் அலை…
இது போல் அம்சம் அம்சமாய் அல்லது உபமானமாய் அவரவர் மனப் பக்குவத்துக்கேற்றபடி அவள் சிருஷ்டியின் அழகில், அவளுடைய மட்டிலாத பெருமை யின் தன்மையை ஒருவாறு அனுமானித்துக் கொள்ளலாமோ என்னவோ (இந்த சமயத்தில் இந்த பாஷை கூட என்னுடையது இல்லை) – வானவில்லை இந்திர தனுஸ் என்கலியா, அது மாதிரி – ஆனால் நேருக்கு நேர், அந்தப் பூரண ஸ்வரூபத்தை நேருக்கு நேர் என்னிக்கேனும், எந்த ஜன்மத் திலேனும் கூடத் தரிசிப்பது சாத்யமோ? முதலில் அது போல் ஒரு பூரணமே இருக்கோ? ஒண்ணு மில்லே. கோவிலுக்குப் போகும் போதெல்லாம் காணும் மூல விக்ரஹத்தை, வீட்டில் தினப்படி ஸ்தோத்திரத்தைச் சொல்லிண்டே, மனசில் கூட்டி மனக்கண் முன் எழுப்பப் பார்த்தாலே கிடைக்க மாட்டேனென்கிறது. அதென்ன வோடி அம்மா, எனக்குச் சந்தேக மாகத்தான் இருக்கு!
சத்யம் கடைசியில் ஜயிக்கலாம். ஆனால் சந்தேகத்துக்குதான் பவர் ஜாஸ்தி!
ஆனால், கமலியை நினைக் கிறப்போ, துளிக்கூடச் சந்தேகமே இல்லை. இதோ, வயிற்றுக்குலை யிலிருந்து அன்னிக்குக் கடைசி யாக் கண்டபடி அப்படியே எழறாள்.
அன்னிக்கென்ன… வெள்ளிக் கிழமை. அந்திவேளைக்குக் குத்து விளக்கை ஏத்திட்டு, விளக்கு முகப்புக்குச் சூட்ட ரெண்டு மல்லி பறிச்சுண்டு வரேன் அம்மானு புழக்கடைப் பக்கம் போனவள் தான்..!
இப்போ அவளுக்கென்ன வயசிருக்கும்? சாமாவுக்கு 32 ஆறது. அத்தோடு அஞ்சைக் கூட் டிக்கோ! காணாமல் போனப்போ வயசு 17. அப்படீன்னா, ஐயோடி கமலி… இப்போ நீயே பேரன் பேத்தி எடுத்திருப்பாயே! அன்னிக் குப் பார்த்தபடியே அழியா மேனிக்கு மனசு நினைச்சுண்டிருந் தால், அது உன் தப்பா?
எப்பவுமே வீடு நெருப்பு பத் திண்டால், தெருவில் போறவாளுக் குத்தான் முதலில் தெரியறது; வீட்டில் இருப்பவாளுக்கல்ல! அதுவும் ராத்திரி வேளையாய் இருந்துட்டா, தலகாணி புடிச்சுண் டப்புறம்தான் அலறிப் புடைச் சுண்டு எழுந்திருக்கோம். அப்போன்னு தூக்கமும் நம்மைத் தனியா அசத்திடறது. அது மாதிரி, கமலி… உன் விஷயத்தில் நாங்கள் ஏமாந்து போயிட்டோமா? இல்லே, உன்னை மை வெச்சு யாரேனும் கடத்திண்டு போயிட் டாளா?
மனுஷாள் இருக்காளே! பாதிப் பேருக்கு விஷ நாக்கு. மறு பாதிக் குப் பொய்யிலேயே புழுத்த நாக்கு. அப்படியே ஒருத்தர், ரெண்டு பேர் உண்மையைச் சொன்னால், நமக்கு உடம் பெரிச்சல். இந்த நிலைமையில் எது நிஜம், எது பொய்? என் செய்வேன் இப்போ?
”உங்கள் கிணற்றடியில் ஒரு ஆள் காத்திருந்தான். அகஸ்மாத்தா நான் ஜலமெடுக்க எங்காத்துக் கிணத்துக்கு வந்திருந்தேன். ரெண்டு பேருமா கொல்லைப்புறத் தோப்பு வழியாகவே நடந்து போயிட்டா. இருட்டில் நான் யாருன்னு கண்டேன்? இப்போ உங்கள் பரவாட்டலைப் பார்த்தா, உங்கள் பொண்தானோனு நினைக்கவேண்டி இருக்கு.”
கமலி, அப்படி நீ கடிவாளத் தைத் தெறிச்சுக்கிற மாதிரியா உன்னை அளவுக்கு மீறி அடக்கி ஆண்டோம்? நீ அப்படிப்பட்ட பொண்ணும் இல்லையே! அடங்கின சரக்குதானே! பள்ளிக் கூடத்துக்கு நேரத்துக்குப் போய் நேரத்துக்கு வந்துடுவையே! ஒரு சாக்குப்போக்குச் சொன்னதில் லையே! இல்லே, பருவத்தின் கோளாறென்று சொல்லும்படி. உன் முகத்தில் மருந்துக்குக்கூட ஒரு பரு நாங்கள் கண்டதில்லையே! அந்த மாசு, மறு இல்லாத முகத் தில், மோவாயில் உனக்குப் பிறவி யிலேயே இருந்த திருஷ்டி மச்சம், நீ சிரிக்கறப்போ உசிர் கண்டு அசையற அழகே தனியாச்சே! உன்னை நாங்கள் எப்படிச் சந்தேகப்படுவோம்!
”மாமி, நான் சொல்றேனேன்னு நினைக்காதேங்கோ. இது ஏதோ ப்ளானாத்தான் நடந்திருக்கு. இல்லாட்டா நீங்க சொன்னதை வெச்சுண்டே, ஒண்ணு கேக்க றேன்… அன்னிக்குன்னு உங்கள் பொண் அவளுடைய நகை அத்தனையும் பூட்டிக்க வேண்டிய அவசியம் என்ன, கால் கொலுசு உள்பட..?”
அட, ராமா! ஒரு வெள்ளிக் கிழமை, குழந்தை அலங்காரம் பண்ணிக்க ஆசைப்படப்படாதா? அதுவே ஒரு குத்தமா ஆயிட ணுமா?
”எல்லாம் போறாத வேளை! புத்தி தெளிஞ்சா தானா கழுதை வந்து சேர்றது, விட்டுத் தள் ளுங்கோ! நாம கவலைப்பட்டுத் தான் என்ன பிரயோசனம்?”
‘அடி கமலி, வயிறு கொதிக்கற துடீ! நீ போனதுகூடப் பெரிசா யில்லேடி… என்னிடத்திலேயே என் குழந்தையைத் திட்ட, நான் எதிர்பேச முடியாமல் கேட்டுண் டிருக்க இடம் கொடுத்துப் போச்சே… அது தாங்கலேடி!’
”உங்கள் பெண், கட்டாயம் இன்னிக்குப் பதினஞ்சாம் நாள் எந்த வழியாப் போனாளோ, அந்த வழியாவே, அதே வேளை யில் திரும்பிடுவா. எனக்கு சோழி சொல்றது!”
‘அங்கே பார்த்தேன்…’ ‘இங்கே பார்த்தேன்…’ ‘அவனோடு பார்த் தேன்…’ ‘இவனோடு பார்த் தேன்…’ ‘தூரத்தான் பார்த்தேன். உங்கள் பொண்ணுதானா தெரி யாது! ஆனால், நிச்சயமாப் பார்த்தேன்.’
ராமா! ராமா! ராமா!
காதைப் பொத்திண்டால் ஆயிடுத்தா..? செவி ஜவ்வில் வார்த்தைகள் ஒட்டிண்டு கழல முடியாமல் தும்பியடிச்சுக்கறதே!
ஊரை விட்டே மாத்திண்டு ஓடி வந்துட்டால் ஆயிடுத்தா? எங்கே போனாலும் வயிற்றில் கூடவே சுமக்கும் அஸ்திப் பானையை என்ன செய்யறது? உள்ளே தணல் திடீர் திடீர் பகீர் பகீர்! வயிறு சுட்ட மண்ணா மாறிடுத்து. அஞ்சு வருஷம் கழிச்சு, எந்த முன்னோர் வழிப் புண்ணியமோ, மறுபடியும் எப்படி ஈரம் கண்டு கசிஞ்சுதோ? பூச்சி வெச்சு, சாமாவும் பிறந்து, ஆளும் ஆயிட்டான். ஆயுசோடு இருக்கணும்.
கமலி, கடைசியா கேக்கறேன் – இது எத்தனாவது கடைசியோ?- நீ பறிபோனையா, துரோகம் பண்ணினையா? ஆனால், நீ எப்படி பதில் சொல்லுவே? பேசா மடந்தையா, புரியாத புதிரா சாகாவரம் வாங்கிண்டு, என் தொண்டையில் மாட்டிண்ட மயிராய் சுத்திச் சுத்தி வரே! கடைசியா, நானும் உனக்கு ஒண்ணு சொல்றேன். போன கையோடு மானம் பெரிசா உன் கையாலோ, பிறர் கையாலோ நீ செத்திருந்தால் நிம்மதி. இல்லே, இன்னும் உசிரோடு இருக்கேன்னா குடிசையில் வாழறையோ, மாடியில் அட்டம் செலுத்தறையோ… எங்கிருந்தாலும் நல்லபடியா, சௌக்கியமாய் இருந்தால் சரி!
நன்றி – விகடன் 12 08 1979
No comments:
Post a Comment